டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் சுமார் 3 இலட்சத்து 74 ஆயிரம் (374,000) தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது.
நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட சூறாவளி, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மாதத்திற்கு சுமார் 48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ILO மதிப்பிட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தால் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நாட்டின் நெல் வயல்களில் சுமார் 23 சதவீதம் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், தேயிலைத் தொழிலும் ஆரம்ப கட்டத்திலேயே 35 சதவீத இழப்பை சந்தித்துள்ளதாக ILO தெரிவித்துள்ளது.
மேலும், தேயிலை உற்பத்தியில் சுமார் 70 சதவீதம் பங்களிக்கும் சிறிய தோட்ட உரிமையாளர்கள் இந்த இயற்கை பேரழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு வெளிப்படுத்துகிறது.
டித்வா சூறாவளியின் தாக்கம் நாட்டின் தொழிலாளர் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

0 Comments