பதுளை மாவட்டம் - மடூல்சீமை, சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் இருந்து மீட்க்கப்பட்ட இளைஞரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக இராணுவத்தினரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹலிலால ரொஸட் கீழ் பிரிவைச் சேர்ந்த விவேகானந்தன் சுஜிவன் என்ற 23 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியே மேற்படி சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன், கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், குடும்பத்தார் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இளைஞனை தேடும் பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுடையது என கூறப்படும் காலணிகள் மற்றும் தொப்பி என்பன குறித்த பகுதியில் மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்ட இராணுவத்தினர், நேற்று புதன்கிழமை காலை எட்டு மணியளவில் இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மூவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பிரதான சந்தேக நபரான சந்திரபோஸ் தயாளன் என்ற 31 வயதுடையவரும், மடுல்சீமை படவத்தையைச் சேர்ந்த 39 வயதுடைய கார் தரகர் ராஜேந்திரன் பிரபாகரன் மற்றும் கொலைக்கு தூண்டியதாக சந்தேகிக்கப்படும் சுதாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்யவுள்ளதாக கூறியே மேற்படி இளைஞனை அந்த சிறிய உலக முடிவு பகுதிக்கு வரவழைத்ததாகவும் சந்தேக நபர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டுள்ளனர்.

0 Comments